கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
நவராத்திரி விழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.;
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு கோவிலில் உற்சவர் சந்நிதி முன்பு விநாயகர், முருகர், சிவன், பார்வதி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் மற்றும் மங்களகரமான நிகழ்வுகளை கூறும் வகையில் உள்ள பொம்மைகளுடன் கொலு அமைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அம்மன் கொலுவில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேப்போல் கோவில்பட்டி கடலை கார தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில், அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில், பேட்டை தெருவில் உள்ள மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலிலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.