நவராத்திரி திருவிழா: கொட்டும் மழையில் வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி
நவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.;
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 23-ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது. 3-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக அருள் உரையும் இரவு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையில் பகவதி அம்மனின் வாகன பவனி நடந்தது.
கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தாமரை தினேஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், 3-ம்நாள் திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர் மகாதானபுரம் சுப்பிரமணியம், ரவி, மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி பொருளாளர் பகவதியப்பன், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கிருஷ்ணன், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரி பூபதி, தே.மு.தி.க. சமூக வலைதள அணி மாநில துணை செயலாளர் வக்கீல் சிவகுமார் நாகப்பன், விற்பனை மற்றும் வருமான வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாகன பவனி முடிந்த பிறகு கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 4-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.
பின்னர் கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரையும் நடக்கிறது. இரவு 7மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.