காரைக்கால், திருவானைக்காவல் கோவில்களில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி

காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நடைபெற்ற விழாவில், சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து செல்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.;

Update:2025-09-03 11:20 IST

வரலாற்றுக்காலத்தில் மதுரையில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக் ஒரு ஆள் அனுப்பவேண்டும் என்ற நிலையில், புட்டு செய்து பிழைப்பு நடத்திவந்த மூதாட்டி ஒருவரால், ஆள் அனுப்பமுடியாமல் தவித்த போது, சிவபெருமான் அந்த மூதாட்டியிடம் சென்று அவருக்காக தான் மண் சுமப்பதாகவும், அதற்கு கூலியாக புட்டு வழங்குமாறு கோரினாராம். தொடர்ந்து, சிவபெருமான் ஒரு பிடி மண்ணை அள்ளி போட்டபோது ஆற்றின் உடைப்பு சரியானதாக வரலாறு. அந்த வரலாற்று நிகழ்வை சித்தரிக்கும் வகையில், காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நேற்று நடைபெற்ற விழாவில், சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி காளிதாசன் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

ஜம்புகேஸ்வரர் கோவில்

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். மதுரையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியை பக்தர்களுக்கு விளக்கும் வகையில் இக்கோவிலில் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று மாலை உற்சவர் ஜம்புகேஸ்வரர் வெள்ளி குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் திருவானைக்காவல் வெள்ளிக்கிழமை சாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை வந்தடைந்தனர். அங்கு திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்