தேய்பிறை சஷ்டி... முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப் பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2025-10-12 16:24 IST

சிறப்பு அலங்காரத்தில் விருத்தாசலம் ஆதி கொளஞ்சியப்பர், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி

முருகப்பெருமானுக்கு உரிய திதி சஷ்டி திதி ஆகும். இந்த நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும் என கந்த சஷ்டி கசவம் கூறுகிறது. சஷ்டி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. எனவே, இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வது வழக்கம்.

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி

அவ்வகையில், புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் உண்ணாமலை அம்பாள் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஆதி கொளஞ்சியப்பர் கோவில்

விருத்தாசலம் எருமனூர் சாலையில் அமைந்துள்ள ஆதி கொளஞ்சியப்பர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆதி கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், தண்ணீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதி கொளஞ்சியப்பரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

இதே போல விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்