2 மாத பெண் குழந்தை கால்வாயில் வீசி கொலை - 3-வதும் மகள் பிறந்ததால் தாய் வெறிச்செயல்

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் கால்வாயில் வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-09-23 05:19 IST

கோப்புப்படம் 

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோரணகல்லு கிராமத்தில் வசித்து வருபவர் சனோஜ்குமார். இவரது மனைவி பிரியங்கா (32 வயது). இந்த தம்பதியின் சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். சண்டூர் அருகே உள்ள ஜிந்தால் தொழிற்சாலையில் சனோஜ்குமார், பிரியங்கா ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3-வதாக பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனால் பிரியங்கா ஏமாற்றம் அடைந்திருந்தார். இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை காலையில் தனது 2 மாத பெண் குழந்தையை காணவில்லை என்றும், யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் சண்டூர் போலீசாருக்கு பிரியங்கா தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தை கடத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அதிகாலையில் தனது குழந்தையை தூக்கி கொண்டு பிரியங்கா செல்வதும், வீட்டுக்கு திரும்பி வரும் போது குழந்தை இல்லாமல் வந்த காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரியங்காவை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது குழந்தை கடத்தப்படவில்லை, தானே கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் பிரியங்கா தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பிரியங்காவை போலீசார் கைது செய்தனர் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால், 2 மாதங்களே ஆன அந்த குழந்தையை கால்வாயில் வீசி பிரியங்கா கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதுகுறித்து பிரியங்கா மீது சண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்