வரதட்சனை கொடுக்க மறுத்த மனைவி... கணவர் செய்த கோர செயல்... கோவிலில் பரபரப்பு கடிதம்
திருமணத்திற்கு பிறகு விஜய், அவரது தாய், தந்தை ஆகியோருடன் பாரதி கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு விஜய், அவரது தாய், தந்தை ஆகியோருடன் பாரதி கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.
தற்போது பாரதி-விஜய் தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம்(செப்டம்பர்) 4-ந் தேதி முதல் பாரதியை காணவில்லை. அவர் அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் விஜய் கூறி வந்தார்.
ஆனால் பாரதியின் அண்ணன் மாருதி திடீரென விஜய்யின் வீட்டுக்கு வந்தான். அப்போது பாரதி அங்கு வரவில்லை என்று விஜய்யிடம் அவர் கூறினார். இதனால் பாரதி எங்கோ மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கடூர் போலீசில் விஜய் புகார் அளித்தார். மேலும் அவர், தனது மைத்துனர் மாருதியை அழைத்துக் கொண்டு சட்னபாளையா கிராமத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு பாரதி பத்திரமாக வீடு வந்து சேரும்படி விஜய் பூஜை செய்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பலரும் வேண்டுதல் நிறைவேற வேண்டி கோவிலில் உள்ள மரத்தில் ஒரு கடிதம் எழுதி ஆணி அடித்து வைப்பது வழக்கம். அந்த மரத்தின் அருகில் சென்று பாரதியின் அண்ணன் பார்த்தார். அப்போது அவரது கண்ணில் விஜய் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் தென்பட்டது.
உடனே அந்த கடிதத்தை எடுத்து மாருதி படித்தார். அதில் விஜய், ‘என் மனைவி தினமும் பேயாக வந்து என்னை பயமுறுத்துகிறாள். அவளால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எந்த பிரச்சினையும், தொந்தரவும் ஏற்படக்கூடாது’ என்று எழுதி இருந்தார். இதனால் பதற்றம் அடைந்த மாருதி, உடனே இதுபற்றி கடூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விஜய்யை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மனைவி பாரதியை கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசிவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார். அதாவது விஜய் ஒரு கார் வாங்கி உள்ளார். அந்த காருக்கு ரூ.2 லட்சம் தவணை செலுத்த வேண்டி இருந்தது. அந்த பணத்தை வரதட்சணையாக வாங்கி வரும்படி பாரதியிடம் விஜய் கூறியுள்ளார்.
அதற்கு பாரதி மறுக்கவே அவரை கழுத்தை நெரித்து கொன்று உடலை ஆழ்துளை கிணற்றில் வீசியதும், பின்னர் பேயாக வந்து மனைவி பயமுறுத்துகிறாள் என்று கருதி கோவிலில் உள்ள மரத்தில் விஜய் கடிதம் எழுதி ஆணி அடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் விஜய்யை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.