சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல்

நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.;

Update:2025-09-16 03:43 IST

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் தனக்கு படுக்கை, 2 தலையணைகள் வழங்கும்படி கோரி பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடிகர் தர்ஷன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த கோர்ட்டும், கடந்த வாரம் தர்ஷனுக்கு படுக்கை, தலையணைகள் வழங்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் தர்ஷனுக்கு படுக்கை, தலையணைகளை சிறை நிர்வாகம் வழங்கவில்லை. இதையடுத்து, தனக்கு படுக்கை, தலையணை வழங்க கோரி நடிகர் தர்ஷன் சார்பில், அவரது வக்கீல் சுனில் அதே கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தர்ஷன் சார்பில் ஆஜரான வக்கீல், கோர்ட்டு உத்தரவிட்டும், சிறை நிர்வாகம் மனுதாரருக்கு (தர்ஷன்) படுக்கை, தலையணைகளை வழங்கவில்லை. கோர்ட்டு உத்தரவை சிறை நிர்வாகத்தினர் மீறியுள்ளனர். இது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், இன்னும் அவரை தனிமைப்படுத்தும் அறையிலேயே அடைத்துள்ளனர்.

எனவே மனுதாரருக்கு படுக்கை, தலையணைகள் வழங்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வக்கீல் வாதிட்டார். இதையடுத்து, சிறை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கி, இந்த மனு மீதான விசாரணையை நாளை (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்