ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து
ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.;
Photo Credit: PTI
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12-ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 270 பேர் பலியாகினர். ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்படுவது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் பயணித்த அதே வழித்தடத்தில் செல்ல இருந்த மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், " ஏர் இந்தியாவில் ஏஐ 159 விமானம், பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் மூன்று மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதாவது, 1.45 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்" என்றனர்.