விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்
விபத்தில் மொத்தம் 274 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று முன் தினம் மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 274 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிறுவனமான டாடா குழுமம் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1.25 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.