வியட்நாம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில் நுட்ப கோளாறு; பயணிகள் அதிர்ச்சி
வியட்நாம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் டெல்லி திரும்பியது.;
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரம் நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320 என்ற எண் கொண்ட ஏர்பஸ் விமானம் இன்று மதியம் 1.45 மணியளவில் புறப்பட்டது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேரத்திற்கும் 45 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டது.
எனினும், நடுவானில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, உடனடியாக டெல்லி நோக்கி விமானம் திரும்பியது. விமானத்தில் மொத்தம் 130 பயணிகள் இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லியில் வானில் வட்டமடித்து விட்டு, டெல்லி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதனை தொடர்ந்து, மாற்று விமானம் உதவியுடன் பயணிகள் வியட்நாமுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அது புறப்பட்ட நேரம் பற்றிய குறிப்பிட்ட விவரங்களை ஏர் இந்தியா வெளியிடவில்லை.