அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் - என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் தகவல்
‘வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு’ என்ற தலைப்பில், போர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து கூறப்பட்டுள்ளன.;
புதுடெல்லி,
மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை தயாரித்து அளிக்கிறது.
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கு என்.சி.இ.ஆர்.டி. இந்த வாரம் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 'ஆராயும் சமூகம்-இந்தியா மற்றும் அதற்கு அப்பால்' என்ற பெயரில் அந்த புத்தகம் வந்துள்ளது. அதில், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் காலனி ஆட்சிக்காலம் குறித்து முதல்முறையாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் தொடக்கத்தில், 'வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு' என்ற தலைப்பில், போர் மற்றும் ரத்தக்களறி குறித்த வன்முறை நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.
கொடூர வன்முறை, மோசமான ஆட்சி, அதிகார வெறி ஆகியவை எப்படி தொடங்கியது என்று மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், கடந்த கால தவறுகளுக்காக இப்போது யாரையும் பொறுப்பாக்கக் கூடாது என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாறு அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் என்னென்ன..?
பாபர், கொடூரமான, இரக்கமற்ற ஆட்சியாளராக இருந்தார். நகரங்களின் ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்தார். அவுரங்கசீப், ராணுவ ஆட்சியாளராக இருந்தார். கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை அழித்தார்.
அக்பர் ஆட்சிக்காலம், கொடூரமும், சகிப்புத்தன்மையும் கலந்ததாக இருந்தது. சித்தூர்கர் முற்றுகையின்போது, 30 ஆயிரம் அப்பாவிகளை படுகொலை செய்ய அக்பர் உத்தரவிட்டார். அவரது நிர்வாகத்தின் உயர் பொறுப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த அளவிலேயே இருந்தனர்.
பொதுவாக, அக்கால கட்டத்தில் மத சகிப்புத்தன்மை இல்லாமல் இருந்தது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 'ஜிசியா' வரி விதிக்கப்பட்டது. இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யும் முயற்சி நடந்தது.
இருப்பினும், இந்திய சமூகம் அதற்கேற்ப தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, இடிக்கப்பட்ட கோவில்களையும், நகரங்களையும் மறுநிர்மாணம் செய்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், மராட்டியர்கள், அஹோம்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் ஆகியோரை பாடப்புத்தகம் உயர்வாக சித்தரித்துள்ளது. சத்ரபதி சிவாஜி, தாராபாய், அஹில்யாபாய் ஹோல்கர் ஆகியோர் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்களாக வர்ணிக்கப்பட்டுள்ளனர்.
சிவாஜி, போர் வியூகம் வகுப்பதில் வல்லவர் என்றும், அவர் மற்ற மதங்களை மதித்ததுடன் இந்து தர்மத்தை உயர்த்திப் பிடித்தார், கோவில்களை மறுசீரமைத்தார் என்றும் பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
அக்பர் படையை எதிர்த்து போரிட்ட ராணி துர்காவதி, மேவார் மன்னர் மகாராணா பிரதாப் தப்பிய சாகசம், முகலாயர்களுக்கு எதிரான ஜாட் விவசாயிகளின் வீரம் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.