தெரு நாய் தொல்லை விவகாரத்தில் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும்: ராகுல் காந்தி
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக கடந்த மாதம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. குழந்தைகள் கூட நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாகவும், அதனால் ‘ரேபிஸ்’ நோய் பரவுவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.நாய்க்கடியின் தீவிரத்தன்மை கருதி, பத்திரிகை செய்தி அடிப்படையில், கடந்த மாதம் 28-ந் தேதி, அந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு,
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.மேலும், இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் ஒரு நாய்கூட தெருக்களில் இருக்கக் கூடாது என்றும் டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது: ”டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற கோர்ட்டின் உத்தரவு, ஒருபடி பின்நோக்கிச் செல்லும் வகையில் உள்ளது.
இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகிய நடவடிக்கைகள் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது, இரக்கமற்றது.பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் உறுதி செய்ய முடியும். இந்த விவகாரத்தில் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.