பீகாரில் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; 121 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு
முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 1,192 ஆண்கள், 122 பெண்கள் என 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.;
பாட்னா,
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. மீதம் உள்ள 123 தொகுதிகளுக்கு 11-ந் தேதி தேர்தல் நடைபெறும். 2 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட பிரசாரத்தின் இறுதி நாளான இன்று தங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி, ‘இந்தியா’ கூட்டணியின் கட்சி தலைவர் கள், நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், வீதி வீதியாக பேரணி என தீவிரமாக வாக்கு சேகரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் ‘என்னுடைய வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி’ என்ற கூட்டத்தில் பெண் தொண்டர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலியில் கலந்துரையாடினார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜனதா கூட்டணி) வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் உள்பட பலர் பீகாரில் வாக்கு சேகரித்தனர். ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘இந்தியா’ கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளரும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 1,192 ஆண்கள், 122 பெண்கள் என 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள 121 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.