பீகார் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் இழுபறி நீடிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 103 இடங்களிலும், பா.ஜ.க. 102 தொகுதிகளிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
பாட்னா,
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. இம்முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த கூட்டணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் கூட்டணி அதேபடி நீடிக்கிறது.
ஆளும் கூட்டணி கட்சிகளை எதிர்த்து தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து “இந்தியா கூட்டணி” எனும் பெயரில் களமிறங்கியுள்ளது. தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் “ஜன் சுராஜ்” கட்சி தனித்து போட்டியிடுகிறது.பா.ஜ.க. மற்றும் “இந்தியா” கூட்டணிக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜன சக்தி கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆரம்பத்தில் இழுபறி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அக்கட்சி பிரசாந்த் கிஷோரின் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என கூறப்பட்டது. எனினும், லோக்ஜன சக்தி கட்சி தொடர்ந்து அக்கூட்டணியிலேயே நீடித்து வருகிறது.
பா.ஜ.க. கட்சியின் பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் சிராக் பஸ்வானுடன் பாட்னாவில் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தினர்.மத்திய மந்திரி நித்யானந்த் ராய் நேற்று இரவு சிராக் பஸ்வானை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.பா.ஜ.க. கூட்டணியில் லோக்ஜன சக்தி கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.மேலும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி ஜித்தன் ராம் மன்ஜி தலைமையிலான “இந்துஸ்தான் அவா மோர்ச்சா” கட்சி மற்றும் உபேந்திர குஷ்வாகா தலைமையிலான “ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா” கட்சிகளுடன் தர்மேந்திர பிரதான் மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்துஸ்தான் அவா மோர்ச்சா கட்சிக்கு 8 இடங்களும், ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 103 இடங்களிலும், பா.ஜ.க. 102 தொகுதிகளிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், இன்று தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து இதனை அறிவிக்க உள்ளனர்.
“இந்தியா” கூட்டணியைப் பொறுத்தவரை, தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு, 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை குறைந்தது 65 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.ஆனால் “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு 138 இடங்களும், காங்கிரசுக்கு 52 தொகுதிகளும், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் லிபரேஷன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மொத்தம் 35 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு 24 தொகுதிகள் வேண்டும் என கோருகிறது. அதேபோல, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் லிபரேஷன் கட்சியும் கடந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதைக் காரணம் காட்டி கூடுதல் இடங்களை கேட்டு வருகிறது.
தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திடீரென 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருவதால், விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டால்தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியும். ஆனால் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால் “இந்தியா” கூட்டணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை இன்னும் ஓரிரு நாட்களில் முடிக்க கட்சி தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.