பீகார் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளத்தின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பீகார் தேர்தலையொட்டி ஐக்கிய ஜனதா தளத்தின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.;
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 57 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியிட்டது.
அதில், விஜய்குமார் சவுத்ரி, ஷர்வன் குமார், மதன் சஹானி, ரத்னேஷ் சதா, மகேஷ்வர் ஹசாரி உள்பட பெரும்பாலான மந்திரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.கட்சியின் மாநில தலைவர் உமேஷ் குஷ்வாஹா, தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்த ஆனந்த்குமார் சிங், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருந்து வந்த ஷ்யாம் ரஜாக் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஞ்சிய 44 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஷீலா மண்டல், விஜேந்திர பிரசாத் யாதவ், லேஷி சிங், ஜெயந்த்ராஜ், முகமது ஜமாகான் உள்ளிட்ட மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். அந்த கூட்டணியில் பாஜக ஏற்கனவே போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான (101) வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. தற்போது ஐக்கிய ஜனதா தளமும் 101 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.