பாகிஸ்தானுக்கு எல்லை பாதுகாப்புப்படை மரண அடி கொடுத்தது ; அமித்ஷா பெருமிதம்
பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.;
ஸ்ரீநகர்,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. 3 நாட்கள் நடந்த மோதலின்போது இரு தரப்பிலும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் சண்டை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் முதல் முறையாக உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அவர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு சூழ்நிலை, அமர்நாத் யாத்திரைக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், அமித்ஷா பேசியதாவது, பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டபோது நமது எல்லைகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எல்லை பாதுகாப்புப்படை மரண அடி கொடுத்தது
எல்லை பாதுகாப்புப்படையின் ஜம்மு பிரிவு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் 118 எல்லை நிலைகளை அழித்தது. எதிரிகளின் கண்காணிப்பு கட்டமைப்புகளை ஜம்மு பிரிவு எல்லை பாதுகாப்புப்படை துண்டு துண்டாக முற்றிலும் அழித்தது. இந்த கண்காணிப்பு கட்டமைப்பை மீண்டும் அமைக்க பாகிஸ்தானுக்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்' என்றார்.