2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - அரசாணை வெளியீடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-16 13:19 IST

புதுடெல்லி,

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும். இதற்கான அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2027 மார்ச் 1-ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026 அக்டோபர் 1ம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள்,1.3 லட்சம் அதிகாரிகள் அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள். அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்