காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பால் கனமழை; நிலச்சரிவு-வீடுகள் இடிந்து 11 பேர் பலி

காஷ்மீர் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் நேற்று மீண்டும் மேக வெடிப்பால் மழை வெளுத்து வாங்கியது.;

Update:2025-08-30 18:37 IST

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த மேக வெடிப்பினால் கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது. காஷ்மீர் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் நேற்று மீண்டும் மேக வெடிப்பால் மழை வெளுத்துவாங்கியது.

ரியாசி மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி நகீர் அகமது, அவரது மனைவி மற்றும் 5 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். ராம்பன் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தில் ஒரு பள்ளி வெள்ளத்தில் சேதமடைந்தது. வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் 5 பேரை காணவில்லை.

அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதமடைந்ததால் ஜம்மு-ஸ்ரீநகர் சாலை தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-கத்ரா இடையே ரெயில் சேவை 5-வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, உதம்பூர், ராம்பன் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்