டெல்லியில் வெற்றிபெற்றால் 3 ஆண்டுகளில் யமுனா நதியை தூய்மைபடுத்துவோம் - பாஜக வாக்குறுதி

டெல்லியில் வெற்றிபெற்றால் 3 ஆண்டுகளில் யமுனா நதியை தூய்மைபடுத்துவோம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.;

Update:2025-01-25 18:37 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் வெற்றிபெற்றால் 3 ஆண்டுகளில் யமுனா நதியை தூய்மைபடுத்துவோம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி தேர்தலையொட்டி இறுதிகட்ட தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்:-

டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அங்கீகாரமற்ற 1,700 காலனிகளில் வசித்துவரும் மக்களுக்கு முழுமையாக சொத்துரிமை வழங்கப்படும்.

தொழிலாளர்கள், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அவர்களுக்கு 10 லட்ச ரூபாய் உயிர் காப்பீடும், 5 லட்ச ரூபாய் விபத்து காப்பீடும் செய்யப்படும்.

ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் டெல்லி மெட்ரோவில் ரூ. 4 ஆயிரம் அளவிற்கு பயணங்களை இலவசமாக மேற்கொள்ளலாம்.

ஏழைகளுக்கு தற்போதைய அரசு (ஆம் ஆத்மி அரசு) வழங்கிவரும் நலத்திட்ட உதவிகள் எதையும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தாது.

டெல்லியில் வெற்றிபெற்றால் 3 ஆண்டுகளில் யமுனா நதியை தூய்மைபடுத்தப்படும்.

50 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும்.

20 லட்சம் பேர் சுயதொழிலில் செய்ய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

டெல்லியில் சாலை அமைக்க ரூ. 41 ஆயிரம் கோடி, ரெயில் பாதை அமைக்க ரூ. 15 ஆயிரம் கோடி, விமான நிலையம் அமைக்க ரூ. 21 ஆயிரம் கோடி மத்திய அரசு செலவு செய்துள்ளது

என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்