நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி; ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையம்

பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.;

Update:2025-09-06 19:52 IST

டெல்லி,

பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டது. இதில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவோ? ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் வரும் புதன்கிழமை (10ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளுதல், அதில் உள்ள சவால்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்