‘150 ஆண்டுகளுக்கு பிறகும் ‘வந்தே மாதரம்’ பாடல் தேசியவாத தீச்சுடரை எரிய வைக்கிறது’ - அமித்ஷா

‘வந்தே மாதரம்’ பாடல் தேசத்தை ஒன்றிணைத்து சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-07 10:59 IST

சென்னை,

இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்து, தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை தொடர்ந்து தூண்டி வரும் ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு(2026 நவம்பர் 7-ந்தேதி வரை) நடைபெறக் கூடிய தேசிய கீத கொண்டாட்டங்களை தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட உள்ளார்.

வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி 'பங்கதர்ஷன்' என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. பின்னர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ல் அவரது புகழ்பெற்ற 'ஆனந்தமடம்' நாவலில் இந்த பாடலைச் சேர்த்தார். இந்த பாடல் ரவீந்திரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டது. இந்த பாடலானது நாட்டின் நாகரிக, அரசியல் மற்றும் கலாசார உணர்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், ‘150 ஆண்டுகளுக்கு பிறகும் ‘வந்தே மாதரம்’ பாடல் தேசியவாத தீச்சுடரை எரிய வைக்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, 'வந்தே மாதரம்' பாடல் தேசத்தை ஒன்றிணைத்து சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது. புரட்சியாளர்களிடையே தாய்நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பெருமை மற்றும் தியாக உணர்வை எழச்செய்தது.

‘வந்தே மாதரம்’ பாடல் வெறும் வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது இந்திய ஆன்மாவின் குரல். இது நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் அணையாத தேசியவாத தீச்சுடரை எரிய வைக்கிறது. அது இளைஞர்களிடையே ஒற்றுமை, தேசபக்தி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் ஆதாரமாக உள்ளது.

நமது தேசிய பாடல் இந்த ஆண்டு 150 ஆண்டுகளை எட்டுகிறது. குடிமக்கள் இந்த பாடலை அதன் முழுப் பதிப்பையும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பாடி நினைவுகூர வேண்டும். அது எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகத்தை அளிக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்