ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் - ராஜ்நாத் சிங்
பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏரோஸ்பெஸ் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இந்த ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிரமோஸ் ஏரோஸ்பெஸ் ஆலை பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு பாதுகாப்புப்படைக்கு கொடுக்கப்படும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் , உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, பாதுகாப்புப்படையின் முக்கிய அங்கமாக பிரமோஸ் மாறிவிட்டது. நாட்டின் கனவுகளை நனவாக்கும் வலிமையை பிரமோஸ் ஏவுகணை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வட்டத்திற்குள்ளேயே உள்ளன. ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது வெறும் டிரைலர்தான்’ என்றார்.