பயங்கரவாதி ராணாவை திகார் சிறையில் அடைக்க திட்டம்; பலத்த பாதுகாப்பு
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை திகார் சிறையில் அடைக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.;
புதுடெல்லி,
நாட்டின் நிதி தலைநகராக கருதப்படும் மும்பை நகருக்குள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இதில் அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார். மற்ற 9 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் விசாரணைக்கு பிறகு 2012-ம் ஆண்டு புனேயில் உள்ள எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான்.இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தான் வம்சாவளியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலானி அமெரிக்காவில் பிடிபட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் தற்போது அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களில் மற்றொருவரும், பாகிஸ்தானை சேர்ந்த கனடா தொழில் அதிபருமான தஹாவூர் ராணா கடந்த 2009-ம் ஆண்டு இன்னொரு பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் பிடிபட்டார். அந்த வழக்கில் அவருக்கு அமெரிக்க கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மும்பை தாக்குதல் சம்பவத்தில் டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு உதவியதாகவும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டதும் தெரியவந்தது.
இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன்பலனமாக ராணாவை நாடு கடத்தும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டி, அவர் சிறப்பு விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விமானம் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் உடனடியாக கைது செய்து விசாரிக்க உள்ளனர். மும்பை போலீசாரும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்த விசாரணையின் மூலம் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்றும், பாகிஸ்தானின் தொடர்பு அம்பலமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்கு பிறகு ராணா டெல்லி திகார் அல்லது மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார். இதற்காக 2 சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து ராணாவை அழைத்து செல்ல குண்டு துளைக்காத வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. ராணா அழைத்து செல்லப்படும் காருக்கு முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய கமோண்டாக்கள் பாதுகாப்புக்கு செல்வார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.