அமீபா மூளைக்காய்ச்சலால் சிறுமி பலி: ஆத்திரத்தில் அரசு டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை

சிறுமிக்கு அமீபா மூளைக்காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.;

Update:2025-10-09 07:54 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி தாலுகா அரசு மருத்துவமனையில் விபின் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்த போது, மருத்துவமனைக்கு ஒருவர் வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விபினின் தலையில் வெட்டினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே டாக்டர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாமரைச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணியில் இருந்த அரசு டாக்டரை அரிவாளால் வெட்டியது சனுப் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சனுப்பின் 9 வயது மகள் அமீபா மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தாமரைச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்தது உறுதியானது

இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி சிறுமி இறந்தாள். இந்த சம்பவத்தில் தாமரைச்சேரி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு டாக்டர் விபின் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பின்னர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது அமீபா மூளைக்காய்ச்சல் நோய் முற்றிய நிலையில் இறந்ததாகவும் சனுப் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் டாக்டரை பழிவாங்க காத்திருந்து, அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்