வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்; வீடியோ எடுத்த நபரின் அதிர்ச்சி பின்னணி
வளர்ப்பு பாம்பை வைத்து, பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி இம்ரான் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என குறிப்பிட்டு உள்ளார்.;
கோட்டா,
ராஜஸ்தானின் கோட்டா நகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது 29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுதவிர, பாம்பு, ஆந்தை ஆகியவற்றையும் வளர்த்து வருகிறார். சூனியம் வைக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், முதியவர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடியிலும் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி பேசுவதற்காக முதியவரின் உறவினர் இம்ரான் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, இம்ரானின் மொபைல் போனில் முதியவரின் உறவுக்கார சிறுமியை இம்ரான் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்த சிறுமியின் உறவினர், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வளர்ப்பு பாம்பை வைத்து, பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி இம்ரான் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என குறிப்பிட்டு உள்ளார்.
இதனால், இந்த விவகாரத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் விசாரிக்க உள்ளனர். இதுபற்றி கோட்டா நகர எஸ்.பி. அம்ரிதா துஹான் கூறும்போது, புகாரை தொடர்ந்து இம்ரானை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.7.20 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நாளை (மே 23) வரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது என கூறியுள்ளார்.
சிறுமி பலாத்கார வீடியோவை இம்ரானின் மனைவி மொபைல் போன் உதவியுடன் எடுத்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர். சிறுமியை பாம்பை காட்டி மிரட்டி இம்ரான் பலாத்காரம் செய்துள்ளார். இதனை விசாரணையின்போது சிறுமி கூறியுள்ளார். இந்த விசயம் பற்றி வெளியே கூறினால், பாம்பை விட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.