தூக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற மத்திய அரசு எதிர்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

தூக்கில் தொங்க விடுவது மிகவும் கொடூரமானது, இதில் சுமார் 40 நிமிடங்கள் உடல் தொங்கவிடப்படுகிறது என்று ரிஷி மல்கோத்ரா வாதிட்டார்.;

Update:2025-10-17 01:30 IST

புதுடெல்லி,

இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது வலி நிறைந்தது என்பதால் அதற்கு பதிலாக விஷ ஊசி மூலமோ அல்லது விஷ வாயு, மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும் என ரிஷி மல்கோத்ரா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட ரிஷி மல்கோத்ரா, தூக்கில் தொங்க விடுவது மிகவும் கொடூரமானது என்றும், இதில் சுமார் 40 நிமிடங்கள் உடல் தொங்கவிடப்படுகிறது என்றும் கூறினார். அதேநேரம் விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றுவது சிறந்த வழி எனக்கூறிய மல்கோத்ரா, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 49-ல் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் தூக்கில் தொங்க விடுவதா அல்லது விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றுவதா என்பதை தேர்வு செய்யும் உரிமையையாவது அந்த கைதிக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது மத்திய அரசு வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றுவது சாத்தியமான வழியாக இருக்காது என்றும் கூறினார்.

அப்போது நீதிபதிகள், ‘காலப்போக்கில் அனைத்தும் மாறி விட்டது. ஆனால் அரசு காலத்துக்கு ஏற்ப பரிணமிக்க தயாராக இல்லை என்பதுதான் பிரச்சினை’ எனக்கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்