2.45 கோடி வீடுகளுக்கு எப்படி வேலை தருவீர்கள்? கணக்கு போட்டு கேள்வி கேட்ட ஓவைசி

பீகாரின் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டே ரூ.2 லட்சம் கோடிதான். அப்படி என்றால் அவர் எப்படி சம்பளம் தருவார் என ஓவைசி கேட்டுள்ளார்.;

Update:2025-10-29 21:56 IST

கிஷன்கஞ்ச்,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு பீகாரின் கிஷன்கஞ்ச் நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார். அவர் தேஜஸ்வி யாதவின் தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு பேசும்போது, பொய் சொல்வதில் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடியுடன் போட்டி போட்டு வருகிறார். பீகார் முழுவதும் 30 லட்சம் மக்கள் அரசு வேலையில் உள்ளனர்.

பீகாரில் 2.45 கோடி வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கு ஓர் அரசு வேலை தருவேன் என அவர் கூறுகிறார். அதற்கு எவ்வளவு செலவாகும்? என கேள்வி எழுப்பி நிறுத்தினார். 2.75 கோடி பேருக்கு அவர் வேலை கொடுக்கிறார் என்றால், குறைந்தது, ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் கொடுக்க வேண்டும்.

அதற்கு ரூ.8.28 லட்சம் கோடி செலவாகும். பீகாரின் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டே ரூ.2 லட்சம் கோடிதான். அப்படி என்றால் அவர் எப்படி சம்பளம் தருவார். பணம் மரத்தில் இருந்து விளையாது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்