குண்டாக இருக்கிறாய்... வரதட்சணை வாங்கி வா என கூறி மனைவி மீது தாக்குதல்: கணவர் வெறிச்செயல்

வரதட்சணை மற்றும் உடல் எடையை குறிப்பிட்டு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.;

Update:2025-03-09 08:54 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சுந்தரி. இவர்கள் 2 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகினர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வரதட்சணை மற்றும் உடல் எடையை குறிப்பிட்டு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதாவது திருமணத்தின் போது அழகாக இருந்த சுந்தரி, தற்போது குண்டாக உள்ளார். அதனால் தனது அழகை அவர் இழந்ததாக கூறப்படுகிறது. இது சாந்தகுமாருக்கு பிடிக்கவில்லை.

அடிக்கடி அவரது உடல் எடையை காரணம் காட்டி தகராறு செய்துள்ளார். மேலும் வரதட்சணை வாங்கி வரும்படியும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தட்டிகேட்க வந்த சுந்தரியின் பெற்றோரையும், சாந்தகுமார் அவமதித்துள்ளார். ஏற்கனவே இதற்கு முன்பு சாந்தகுமார் மீது சுந்தரி ஆர்.ஆர்.நகர் போலீசில் வரதட்சணை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுந்தரி மற்றும் அவரது மகன், தந்தை ஆகியோர் மீது சாந்தகுமார் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி உள்ளார். இதுகுறித்து சுந்தரி, பீனியா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்