கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஐதராபாத்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று நள்ளிரவில் அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது.;
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கனமழையால் அங்குள்ள ஹிமாயத் சாகர் அணை திறந்ததே வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கனமழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று நள்ளிரவில் அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தண்ணீர் முசி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சடர்காட் மேம்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம், அதன் மேல் செல்லும் சாலையில் பொங்கி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த மேம்பாலமும் சாலையும் மூடப்பட்டன. வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் இந்த வெள்ளம் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. ரங்காரெட்டி மாவட்டம் மீர்பட் கார்ப்பரேஷன் எல்லைக்குட்பட்ட மிதிலா நகர் காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பாதுகாப்பு கருதி 1000-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பல இடங்களில் நேற்று இரவில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.