‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்...’ - நெதன்யாகு சந்திப்பின்போது டிரம்ப் மீண்டும் பேச்சு

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு 8 போர்களை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-30 10:08 IST

வாஷிங்டன்,

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பின்போது டிரம்ப் மீண்டும் இது பற்றி பேசியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அதிபராக பதவியேற்ற பிறகு இதுவரை 8 போர்களை தடுத்து நிறுத்தி உள்ளதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

“நான் 8 போர்களை தடுத்து நிறுத்தினேன். குறிப்பாக அஜர்பைஜான் விவகாரம் குறித்து ரஷிய அதிபர் புதின் என்னிடம் கூறுகையில், ‘அந்த போரை நீங்கள் தீர்த்து வைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் நான் 10 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன்' என்று கூறினார். நான் உண்மையில் அதை ஒரே நாளில் தீர்த்து வைத்தேன்.

வர்த்தகம் தான் இதற்கு காரணம். அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். சண்டையிடும் நாடுகளிடம் இனி உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று கூறினோம். அதோடு நான் 200 சதவீத வரிகளை விதித்தேன். அடுத்த நாளே அவர்கள் அழைத்தார்கள், 35 வருட சண்டையை நிறுத்திவிட்டார்கள்.

இதற்காக எனக்குப் பாராட்டு கிடைத்ததா? இல்லை. நான் இதே போல் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரையும் நான் தடுத்து நிறுத்தினேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்