ராணுவ வீரராக உருவாகி, தந்தை மரணத்திற்கு பழிவாங்க விரும்புகிறேன்: மகள் பேட்டி
நாட்டை பாதுகாக்கும்போது என்னுடைய தந்தை வீர மரணம் அடைந்ததற்காக பெருமையாக உணர்கிறேன் என்று அவருடைய மகள் கூறினார்.;
ஜுன்ஜுனு,
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, கடந்த 6-ந்தேதி இரவில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதனால், போர் பதற்றம் அதிகரித்தது.
எனினும், 4 நாட்களாக நடந்து வந்த மோதலுக்கு இடையே இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி கொள்வது என முடிவு செய்தது. இதன்படி, நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டது. ஆனால், போர் நிறுத்தத்திற்கு பின்பும் இரவில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. அவர்களை இந்திய ஆயுத படைகள் எதிர்கொண்டன.
அப்போது, ராணுவ வீரர் சுரேந்திரா மொகா என்பவரும் பணியில் இருந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்த காஷ்மீரின், ஆர்.எஸ். புரா பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, பாகிஸ்தானின் எறிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானார்.
இதனை தொடர்ந்து, ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில் உள்ள மாண்டவா என்ற சொந்த கிராமத்திற்கு வீரர் சுரேந்திரா மொகாவின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் ராணுவ வாகனத்தில் இன்று வந்து சேர்ந்தது. அவருடைய உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டு இருந்தது.
அவருடைய மரணம் பற்றி மொகாவின் மகள் வர்திகா நிருபர்களிடம் இன்று அளித்த பேட்டியில் கூறும்போது, எதிரிகளை துவம்சம் செய்து, நாட்டை பாதுகாக்கும்போது, என்னுடைய தந்தை வீர மரணம் அடைந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்.
கடைசியாக நேற்றிரவு 9 மணியளவில் நாங்கள் அவருடன் பேசினோம். அப்போது அவர், டிரோன்கள் (ஆளில்லா விமானம்) பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தாக்கவில்லை என கூறினார் என்றார். தொடர்ந்து வர்திகா கூறும்போது, ஒட்டுமொத்தத்தில் பாகிஸ்தானை முடித்து விட வேண்டும். என்னுடைய தந்தை போன்று நானும் ராணுவ வீரராக விரும்புகிறேன்.
அவருடைய மரணத்திற்கு பழிவாங்க விரும்புகிறேன். ஒவ்வொருவராக அவர்களை நான் முடித்து விடுவேன் என்று ஆவேசத்துடன் கூறினார்.