கல்கி அவதாரம் நடக்க போகும் பகுதியில்... யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியானது, ஹரி மற்றும் ஹரன் ஆகியோரின் இணைந்த தரிசன பகுதியாகும்.;
சம்பல்,
உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சம்பல் மாவட்டத்தின் பாஜோய் நகரில் ரூ.659 கோடி மதிப்பிலான 222 வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார்.
அப்போது அவர், வெளிநாட்டு படையெடுப்பாளர்கள், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை இலக்காக கொண்டு பேசினார். சம்பல் பகுதிக்கு பாவம் செய்பவர்கள், அவர்களுடைய நடவடிக்கைகளுக்காக கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றார். ஒரு காலத்தில் சம்பல் பகுதியில் 68 புனித ஸ்தலங்கள், 19 புனித ஊற்றுகள் மற்றும் பரிகிரம வழிகள் இருந்தன.
ஆனால், வெளிநாட்டின் காட்டுமிராண்டி படையெடுப்பாளர்கள் நம்முடைய புனித ஸ்தலங்களை சேதப்படுத்தியும் மற்றும் அழித்தும் விட்டனர். அவை முடக்கப்பட்டு விட்டன. உண்மையை அழிக்கும் கேடான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பேசினார்.
பாரம்பரியத்துடனான தொடர்பு இருக்கும்போது மட்டுமே வளர்ச்சி அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என வலியுறுத்தி கூறிய அவர், சம்பல் பகுதியின் மத முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.
இந்த பகுதியானது, ஹரி மற்றும் ஹரன் (முறையே விஷ்ணு மற்றும் சிவன்) ஆகியோரின் இணைந்த தரிசன பகுதியாகும். கடவுள் விஷ்ணுவின் 10-வது அவதாரம் எனப்படும் கல்கி அவதாரம் இந்த பகுதியிலேயே தோன்றும்.
கலியுகத்தில் கடவுள் கல்கி தோற்றத்திற்கான மைய பகுதியாக இருக்கும் என சம்பல் பகுதி பற்றி ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், ஸ்கந்த புராணம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றில் கூறப்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். இதனால், சம்பல் பகுதியில் ரூ.659 கோடி மதிப்பிலான 222 வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார்.
காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் படுகொலைகளை செய்தது. கொலைகாரர்களை பாதுகாக்கும் பணியை சமாஜ்வாடி கட்சி செய்தது. நாடு சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் நடந்த படுகொலைகளை பற்றிய உண்மைகள் வெளியிடப்பட்டால், அவர்களுடைய வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என கூறினார்.