நிலநடுக்கத்தால் கோரம்... ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர்.;

Update:2025-09-02 07:37 IST

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது. இதில் நூர்குல், சோகி, வாட்பூர்மனோகி, சபதாரே ஆகிய மாவட்டங்களில் மட்டும் 250 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

சாலை வழியாக சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பல இடங்களில் கட்டிட இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் சாலை மூலமாக பாதிக்கப்பட்ட இடங்களை அடைய முடியவில்லை. எனவே மீட்புக்குழு தவித்து வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலமாக சென்று தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் 15 டன் உணவுப் பொருள்கள், 1,000 டெண்ட்டுகள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை இந்தியா நிவாரண உதவியாக அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேவையான உதவிகள் அளிக்க தயார் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்