இஸ்ரேல் தாக்குதல்; ஈரான் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்ட தலைவர் பலி
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.;
தெஹ்ரான்,
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி மற்றும் ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய படைகளை ஒருங்கிணைக்கும் தளபதி கோலமாலி ரஷித் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஈரான் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்ட தலைவரான ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே தாக்குதலில் உயிரிழந்தார் என்ற தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அவரது மரணம் குறித்த வதந்திகள் ஊடகங்களில் பரவி வந்தாலும், ஈரான் அதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த தகவலை இஸ்ரேல் தற்போது உறுதி செய்துள்ளது. ஜெனரல் அமீர் அலி ஈரான் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதியாகவும், பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் மேற்பார்வையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.