ககன்யான் திட்டம்: விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி
2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது.;
பெங்களூரு,
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது.
அதற்குமுன்பாக 3 முறை ஆளில்லா விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பி அவை பத்திரமாக பூமிக்கு திரும்பும் சோதனையை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. நடப்பு ஆண்டு இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு சோதனை நடைபெற உள்ளது.
இந்த சோதனைகளுக்குப்பின் 2027ம் தேதி ககன்யான் திட்டப்படி விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பப்பட்டு அவர்கள் அங்கு சுமார் ஒருவாரம் ஆய்வுகளை மேற்கொண்டு பத்திரமாக பூமிக்கு திரும்ப உள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டு பின்னர் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பும் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் ககன்யான் திட்டப்படி விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாரசூட் சோதனையை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
விண்கலம் பாரசூட் மூலம் வெற்றிகரமாக கடலில் இறங்குதல் பின்னர் விண்கலத்தை வெற்றிகரமாக மீட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரோ, இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.