உத்தர பிரதேசத்தில் ரூ.200 கடனுக்காக புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை

லக்னோ நெடுஞ்சாலையில் புதுமாப்பிள்ளையின் உடலை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2025-08-05 10:35 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்ஷ்மன்பூர் ஜாத் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிருதய் லால். கொத்தனார் வேலை செய்யும் இவர் அதேபகுதியைச் சேர்ந்த அனுஜ் என்பவருக்கு ரூ.700 கடன் கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 1-ம் தேதி ஹிருதய், அனுஜிடம் ரூ.200 திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு அனுஜ் தன்னிடம் பணம் இல்லை என்றும் தற்போது தர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அனுஜ், அவரது சகோதரர் ராம் கிஷோர், மகன் ஜெகதீஷ் மற்றும் மருமகன்கள் பங்கஜ் மற்றும் சந்தன் ஆகியோர் ஹிருதய் லாலை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், படுகாயமடைந்த ஹிருதய் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று லாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஹிருதய் லால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தப்பி ஓடிய அனுஜ், அவரது சகோதரர் ராம் கிஷோர், ஜெகதீஷ், பங்கஜ் மற்றும் சந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ஹிருதய் லால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லக்னோவிலிருந்து ஆம்புலன்சில் உடல் கொண்டு வரப்பட்டபோது, குடும்பத்தினர் பால்பூரில் உள்ள கோண்டா-லக்னோ நெடுஞ்சாலையில் உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் 'புல்டோசர் நடவடிக்கை' எடுக்கவும் வலியுறுத்தி ஹிருதய் லால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்டதை தொடந்து உறவினர்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

தொடர்ந்து ஜாத் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹிருதய் லாலுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்