மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்து உள்ளது என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.;

Update:2025-06-06 00:25 IST

புனே,

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு பின்னர், உலக நாடுகளிலும் கண்டறியப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல் மற்றும் 2-ம் அலையின்போது தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டது. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதவிர பூஸ்டர் டோஸ்களும் போடப்பட்டன. இதன்பின்னர் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று சமீப வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதில் மராட்டியத்தில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில், புனே மாவட்டத்தில் 48 பேருக்கும், மும்பை நகரில் 34 பேருக்கும் மற்றும் தானேவில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால், கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்து உள்ளது என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

மொத்தம் 14,565 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில், 597 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன் கூடிய 16 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். எனினும், புதன்கிழமையில் இருந்து உயிரிழப்பு பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. இதனால், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்