நவராத்திரி விழா; ராவணனுக்கு பதில் சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பதற்கு கோர்ட்டு தடை
உருவ பொம்மையை எரிப்பது, அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என கோர்ட்டு குறிப்பிட்டது.;
இந்தூர்,
விஜயதசமி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வருகின்றன. இதனை முன்னிட்டு, வட மாநிலங்களில் 10 தலை கொண்ட ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பாவ்ருஷ் என்ற ஆண்கள் உரிமைகளுக்கான அமைப்பு இந்த முறை புதிய வடிவில் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டனர்.
இதன்படி, கள்ளக்காதலுக்காக கணவர்கள் மற்றும் குழந்தைகளை கொடூர கொலை செய்த பெண்கள் 11 பேரின் புகைப்படங்களுடன் கூடிய உருவ பொம்மையை உருவாக்கி அதனை எரிக்க முடிவு செய்தனர். அவர்களில், சோனம் ரகுவன்ஷி, முஸ்கான் உள்ளிட்டோரும் அடங்குவர்.
தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி மனைவி சோனம் ரகுவன்ஷியை அழைத்து கொண்டு ஷில்லாங்கிற்கு தேன் நிலவுக்கு சென்றார். அப்போது, காதலன் மற்றும் கூலிப்படையினருடன் கூட்டு சேர்ந்து கணவரை சோனம் கடுமையாக தாக்கி, கொடூர கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோன்று முஸ்கான், அவருடைய கணவரை கொன்று நீல நிற டிரம்மில் அடைத்து வைத்த சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற கொடூர சம்பவங்களால், திருமணத்திற்கு பின்னான ஆண்களின் வாழ்வு பற்றிய கேள்வி நாடு முழுவதும் எழுந்தது.
அதனால், சமூகத்தில் பரவும் இதுபோன்ற வன்முறை கலாசாரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் தசரா திருவிழாவின்போது, சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பது என அந்த அமைப்பு முடிவு செய்தது.
இந்நிலையில், நவராத்திரி விழாவில் ராவணனுக்கு பதிலாக சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பதற்கு மத்திய பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. அது அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் ஜனநாயக கொள்கைகளை மீறும் செயலாகும் என குறிப்பிட்டு உள்ளது.
கடந்த 25-ந்தேதி, மத்திய பிரதேச ஐகோர்ட்டில் சோனத்தின் தாயார் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், அவருடைய மகளின் வழக்கு விசாரணை நிலையில் உள்ளது. அவரை எந்தவொரு கோர்ட்டும் குற்றவாளி என கூறவில்லை. பொதுவெளியில் சோனத்தின் உருவ பொம்மையை எரிப்பது என்பது அவதூறு ஏற்படுத்துவதுடன், மனதவில் துன்புறுத்தும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டு இருத்து.
இதுபற்றி குறிப்பிட்ட கோர்ட்டு, ஒருவர் குற்ற வழக்கை எதிர்கொள்கிறார் என்றாலும், அவர்களுடைய உருவ பொம்மையை எரிப்பது, அவர்களுடைய நன்மதிப்பை கெடுப்பது என்பது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டது.
ஜனநாயகத்தில் இதுபோன்ற தண்டனை முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்றும் அதுபற்றிய உத்தரவில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.