இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள்: பிரதமர் மோடி
மும்பையில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.;
புதுடெல்லி,
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று கீர் ஸ்டார்மர் வந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்த ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்,பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட 125 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்தனர்.
இந்நிலையில் இன்று மும்பையில் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
“இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். நவீன எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் சார்ந்த பாதுகாப்பை பலப்படுத்த முழு அர்ப்பணிப்புடன் நாங்கள் உள்ளோம். உக்ரைன், காசா விவகாரங்களில் அமைதியை திரும்ப கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்,” என்றார்.