புதிய வருமானவரி மசோதா ஆய்வறிக்கை மக்களவையில் இன்று தாக்கல்
புதிய வருமானவரி மசோதாவில் 57 அட்டவணைகள் உள்ளன.;
புதுடெல்லி,
தற்போது அமலில் உள்ள வருமானவரி சட்டம், 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதை எளிதாகவும், வரிசெலுத்துவோருக்கு உகந்ததாகவும் மாற்றும் வகையில், புதிய வருமானவரி மசோதா, கடந்த பிப்ரவரி 13-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, நாடாளுமன்ற தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, மசோதாவில் 285 யோசனைகளை பரிந்துரைத்துள்ளது. கடந்த 16-ந் தேதி, தேர்வுக்குழு கூட்டத்தில், குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த அறிக்கை, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
தற்போதைய வருமானவரி சட்டத்தில் 5 லட்சத்து 12 ஆயிரம் வார்த்தைகள் இருக்கும்நிலையில், புதிய மசோதாவில் 2 லட்சத்து 60 ஆயிரம் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. அதுபோல், பிரிவுகளின் எண்ணிக்கை 819-ல் இருந்து 536 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதாவில் 57 அட்டவணைகள் உள்ளன. 1,200 நிபந்தனைகளும், 900 விளக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன. வரிவிலக்குகள், டி.டி.எஸ்., டி.சி.எஸ். தொடர்பான உட்பிரிவுகள், அட்டவணை வடிவத்தில் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எந்த ஆண்டுக்கான வருமானத்தை கணக்கிடுறோம் என்பதை 'முந்தைய ஆண்டு' என்று தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்டு வந்தனர். அது, 'வரி ஆண்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது.