ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - 44 பயணிகளின் நிலை என்ன?
மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது பஸ் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.;
ராய்காட்,
மும்பையில் இருந்து சிந்துதுர்க் மாவட்டம் மால்வான் நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 44 பேர் பயணம் செய்தனர். பஸ் நள்ளிரவு 2 மணி அளவில் ராய்காட் மாவட்டம் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றது. பஸ்சில் பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது கஷேட்டி சுரங்கப்பாதை அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது. மேலும் பஸ்சில் தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
உடனே பயணிகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். பயணிகள் இறங்கிய சில நொடிகளில் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயின் காரணமாக பஸ்சில் இருந்த டீசல் டேங்க் வெடித்து சிதறியது. அதற்குள் பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர். சிறிது தாமதித்து இருந்தாலும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். இதனால் பஸ்சில் இருந்த 44 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சில் பற்றிய தீயை சுமார் ஒருமணி நேரம் போராடி அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.