பாதுகாப்பு ஆயுதங்களை 100 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு; ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு ஆயுதங்களுக்கு நாம் பிறநாடுகளை நம்பி இருந்த காலங்கள் இருந்தன என்று அவர் கூறினார்;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக்கில் சிறிய ரக பயிற்சி விமான உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மையத்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். மேலும், தேஜஸ் லைட் எம்கே 1 ஏ ரக போர் விமானங்களுக்கான ஒருங்கிணைந்த தயாரிப்பு மையத்தையும் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, பாதுகாப்பு ஆயுதங்களுக்கு நாம் பிறநாடுகளை நம்பி இருந்த காலங்கள் இருந்தன. நமது பாதுகாப்பு ஆயுதங்கள் 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நமக்கு தேவையான பாதுகாப்பு ஆயுதங்களில் 65 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கிறோம். கூடிய விரைவில் பாதுகாப்பு ஆயுதங்களை 100 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம். நாட்டின் ஆயுத ஏற்றுமதி 25 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2029ம் ஆண்டுக்குள் உள்நாட்டு ஆயுத உற்பத்தியை 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். மேலும், ஆயுத ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்
என்றார்.