மத்திய அரசு பெண்களுக்காக செயல்படுகிறது - பிரதமர் மோடி
மத்திய அரசு பெண்களுக்காக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
காந்தி நகர்,
விவசாயம், கால்நடை, சிறுதொழில் நடத்தி ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டும் பெண்கள் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்க லக்பதி திதி சம்மிலான் என்ற திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று லக்பதி திதி சம்மிலான் திட்டத்தின்கீழ் பயனடைந்த சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.
குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டம் வன்சி போர்சி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லக்பதி திதி சம்மிலான் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பெண்களை பிரதமர் மோடி சந்தித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின்போது 25 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2.50 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் 450 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளின் ஆசியை பெற்றுள்ளதால் நான் உலகின் மிகவும் செல்வந்தராக உள்ளேன்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பாதையை நோக்கி நாடு முன்னேறி செல்கிறது. பெண்களின் மரியாதை மற்றும் வசதிகள் அரசுக்கு மிகவும் முக்கியமானவையாகும்.
நமது (மத்திய) அரசு பெண்களுக்காக செயல்படுகிறது. நாம் ஆயிரக்கணக்கான கழிவறைகளை கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை கொடுத்துள்ளோம். நமது அரசு முத்தலாக்கிற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுவந்து லட்சக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் அழிக்கப்படுவதை தடுத்து அவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளோம்' என்றார்.