ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தகராறில் ஈடுபட்ட பயணியிடம் தீவிர விசாரணை
ஏர் இந்தியா விமான நிறுவனம் இதுபோன்ற விசயத்தில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கொண்டிருக்கிறது என அதன் செய்தி தொடர்பாளர் கூறினார்.;
புதுடெல்லி,
பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து டெல்லி நோக்கி ஏ.ஐ.-454 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று புறப்பட்டது. இந்நிலையில், விமானம் தரையிறங்க இருந்த தருணத்தில் பயணி ஒருவர் மற்றொரு பயணியுடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனை விமான ஊழியர் கவனித்து இருக்கிறார்.
அந்த நபர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார் என பாதிக்கப்பட்ட பயணி ஊழியரிடம் புகாராக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ஊழியர் உடனடியாக செயல்பட்டு, அந்நபரை வர்த்தக பிரிவு இருக்கையில் அமர வைத்துள்ளார்.
விமானம் டெல்லியை சென்றடைந்ததும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பாதுகாப்பு குழுவினரிடம் அந்நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற விசயத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனம் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கொண்டிருக்கிறது.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருடைய பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி கடந்த 12-ந்தேதி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏ.ஐ.-171 என்ற எண் கொண்ட, போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஒன்று புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்தில் சிக்கியது. அது மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது விழுந்தது.
இதில், 242 பேரில் விமான பயணி ஒருவரை தவிர மீதமிருந்த பயணிகள் உள்பட 270 பேர் வரை பலியானார்கள். இந்த விவகாரம் பற்றி விமான விபத்து புலனாய்வு துறை விசாரித்து வருகிறது.