கவர்னருக்கு எதிரான மனு; ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பான வழக்கின் முடிவு தெரிந்த பிறகு விசாரிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு
கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.;
புதுடெல்லி,
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, தமிழ்நாடு உடற்கல்வியில், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம், நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார்.
கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இவ்வாறு அனுப்பி வைத்ததை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி, டி.ஹரீஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மசோதாவுக்கான காலக்கெடு விவகாரத்தில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார். தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இந்த வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.