இந்திராகாந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி
ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து முதல் இடத்தில் உள்ளார்.;
புதுடெல்லி,
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரை நடைபெற்ற 3 தேர்தல்களில் பா.ஜ.க. தொடர் வெற்றி பெற்று பிரதமராக நரேந்திரமோடி இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் இன்று பிரதமராக 4,078 நாட்களை கடக்கிறார். அத்துடன் புதிய சாதனை ஒன்றையும் புரிந்துள்ளார். அதாவது, இந்தியாவின் நீண்ட நாள் பிரதமர் என்ற சாதனைதான் அது.
இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்தக்கரராக இருந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இவர் 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமராக இருந்தார்.அவருக்கு பிறகு நரேந்திரமோடி இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக 2-வது நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுமட்டுமல்லாது, மோடி ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த முதல் பிரதமர். காங்கிரஸ் கட்சியை சாராத பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர். இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து அதிக காலம் பதவி வகித்தவர். குஜராத் முதல்-மந்திரி, பிரதமர் என 2 முழு பதவிக்காலங்களை நிறைவு செய்து, 2 முறை பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவரது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தொடர்ச்சியாக 3 மக்களவை தேர்தல்களில் தங்களது கட்சியை வெற்றிக்கு அழைத்து சென்றதில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி ஏற்கனவே முறியடித்து இருக்கிறார். அந்த வகையில், தற்போது இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி இன்று முறியடித்து உள்ளார்.
ஏற்கனவே, ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து முதல் இடத்தில் உள்ளார். இந்தச் சாதனையை பிரதமர் நரேந்திரமோடி முறியடிக்க வேண்டும் என்றால், 2029-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.