இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி- பேசப்போவது என்ன?
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளர். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாளை முதல் அமலாக உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். எனவே, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மற்றும் அதனால் நாட்டு மக்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் அமலாகும் ஜிஎஸ்டி சீர்திருத்தம்
வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது.
முன்னதாக இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. எனவே இதனை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜி.எஸ்.டி. வரியிலும் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது 5 மற்றும் 18 என்ற 2 வரி விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்கும், 28 சதவீதத்தில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் வருகின்றன. இந்த புதிய விகிதம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளதால், அன்றிலிருந்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.