ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கு: அனில் அம்பானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் மற்றும் ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் நிறுவன இயக்குனர் அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்களில் எஸ் வங்கி கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதில் ரூ.2,796 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அனில் அம்பானி, எஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அனில் அம்பானி மற்றும் ராணா கபூர் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விதிமுறைகளை மீறி அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ராணா கபூர் இந்த முதலீடுகளை செய்ததாகவும், இந்த பணம் பின்னர் படிப்படியாக கையாடல் செய்யப்பட்டதாகவும் சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது. இதன் மூலம் வங்கிக்கு ரூ.2,796 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.