பாக். எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இன்று நடைபெறுவதாக இருந்த பாதுகாப்பு ஒத்திகை தள்ளிவைப்பு
4 மாநிலங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.;
டெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் போர் கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அன்றைய தினமே பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
போர் ஒத்திகையின்போது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
இந்நிலையில், 4 மாநிலங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த போர்க்கால ஒத்திகையின்போது கட்டுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி, தீயணைப்பு, மீட்புக்குழுவினரின் செயல்பாடுகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது, அரியானாவில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 22 மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தகவல். ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.