காலணி வீசிய விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் குடும்பத்தினர் கூறியது என்ன?

வாழு மற்றும் வாழ விடு என்ற முக்கிய கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கமல் கவாய் கூறியுள்ளார்.;

Update:2025-10-08 19:56 IST

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 6-ந்தேதி வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரங்களை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு வந்தனர். அவற்றை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.

இதனை கவனித்த காவலாளிகள், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கோர்ட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டால் அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூச்சலிட்டபடி வெளியேறினார். இதனை தொடர்ந்து, ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்படுகிறது என பார் கவுன்சில் அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீதிபதி கவாய் குடும்பத்தினர் இதற்கு எதிர்வினையாற்றி உள்ளனர். நீதிபதி கவாயின் சகோதரி கீர்த்தி கவாய், தாயார் கமல் கவாய் ஆகியோர் அரசியல் சாசனத்தின்படி மக்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டும் என கூறினர்.

இதுபற்றி கீர்த்தி கவாய் கூறும்போது, சகோதரர் பூஷணிடம் பேசினேன். இதனை தவிர்க்கும்படி கோர்ட்டில் அவர் கேட்டு கொண்டார். அது அவருடைய தன்னடக்கம். ஆனால், இதுபோன்ற தவறான அணுகுமுறையை நாம் நிறுத்தவில்லை என்றால், வருங்கால தலைமுறையினர் நம்மை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றார்.

இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் எவராக இருப்பினும் அவர் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். இது ஒரு விஷ கருத்தியல் ஆகும் என்றார்.

கமல் கவாய் கூறும்போது, மக்கள் அரசியல் சாசனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னணியில் உள்ள வாழு மற்றும் வாழ விடு என்ற முக்கிய கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (வயது 71), டெல்லி மயுர் விஹார் பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் பற்றி ராகேஷ் கூறும்போது, கடந்த செப்.டம்பர் 16-ந்தேதி தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோவிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், 'சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேலி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. நீங்கள் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் கேலி செய்யாதீர்கள்.

அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி. இருப்பினும், நான் வன்முறையை எதிர்க்கிறேன். ஆனால், அது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காக பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நானாக எதுவும் செய்யவில்லை. கடவுள் என்னை அதனை செய்ய வைத்தார். கடவுள் சொல்லித்தான் செய்தேன். இதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்